இரண்டாம் உலக மகா யுத்த காலத்தில் ஷகொள்ளை என்ற மாற்ற மருந்தில்லாத நோய்க்குள்ளாகி இறந்தவர்களை அவர்களின் உடலில்

கைபடாது படுத்த பாயுடன் சுருட்டித் தூக்கி கிடங்கில் போட்டு எரித்துவிடுவது சட்டத்துக்குட்படாத வழக்கமாகவிருந்தது.

இன்று கொரோனா மரணங்களும் அது போன்ற இறுதிச் சடங்குகளையே சந்திக்கின்றன. மரணித்தவர் இரத்த உறவாயினும், தொற்று நோயாக இருப்பின் வேறு என்ன செய்ய முடியும்?

சீனாவின் வுகான் மாநிலத்தில் பிறந்த ஒரு நச்சுக்கிருமியை உலகம் தத்தெடுத்து பங்கிட்டு அதன் தாக்கத்திலிருந்து விடுபட முடியாது தவித்துக் கொண்டிருக்கிறது.

இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத கொரோனா என்ற இந்த வைரஸ், சர்வதேசத்தையும் தனது பிடிக்குள் கொண்டு வந்து ஒவ்வொருவரையும் வாழ்வா சாவா என்று நிலைகுலைய வைத்துள்ளது.

கண்டம் விட்டுக் கண்டம் பாயும் குண்டுகளைவிட மோசமான வீரியத்துடன் பரவும் இந்த வைரஸ் தானாக உருவானதா? அல்லது எவராவது ஒருவரால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதா?

பல மேற்கு நாடுகளின் விரல் சீனாவின் பக்கம் நீளுகின்றது. இதனை ஒரு பயங்கரவாதத் தாக்குதலென்று சில நாடுகள் பகிரங்கமாகக் கூறுகின்றன.

வெள்ளை மாளிகைக்கு அமெரிக்க புலனாய்வுத்துறை இது தொடர்பாக ஓர் அறிக்கையை சில நாட்களுக்கு முன்னர் கையளித்தது. சீனாவில் இந்நோயினால் பாதிக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கையை அந்நாட்டு அரசு இதுவரை வெளியிடவில்லையென்றும் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளனவென்றும் இந்த அறிக்கை சுட்டுகின்றது.

சீனாவிடம் இந்நோயைக் கட்டுப்படுத்தும் அல்லது குணமாக்கும் மருந்து கைவசம் உள்ளதென ஓரிரு நாடுகள் நம்புகின்றன. இல்லையென்றால், வுகானில் பலரைக் கொலை செய்த கொரோனா அங்குள்ள மற்றைய பிரதேசங்களுக்கு ஏன் பரவ முடியாமல் போனதென்ற கேள்விக்கு சீனாவிடம் மட்டுமன்றி எவரிடமும் பதிலில்லை.

கொரோனாவுக்கென தனியான மருத்துவமனைகளை சில நாடுகள் கட்ட ஆரம்பித்துள்ளன. பல நாடுகளில் பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. உணவுச்சாலைகளும் களஞ்சியசாலைகளும் சீல் வைக்கப்படுகின்றன.

கனடாவின் ஒன்ராறியோவில் யூன் மாத இறுதிவரை சகல கொண்டாட்டங்கள், விழாக்கள், ஊர்வலங்கள், ஒன்றுகூடல்களுக்கு அரசு தடை செய்துள்ளது.

யூலை இறுதிவரை தற்போதைய அபாய சூழ்நிலை தொடருமென கருதுவதாக கனடிய மத்திய அரசின் உள்ளக அறிக்கையொன்றை மேற்கோள் காட்டி கனடிய மைய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. இது உண்மையாக இருக்குமானால், தற்போதைய கொதிநிலை இவ்வருட இறுதிவரை நீடிக்கக்கூடும்.

சில நாடுகளில் உடலப் பெட்டிகள் தயாரிக்கும் தொழிலகங்கள் உருவாக்கப்படுகின்றன. கொரோனா பாதி;ப்பால் வேலையிழந்த பலர் இத்தொழில்துறையில் வேலை பெற ஆரம்பித்துள்ளனர்.

அழிவில் கிடைக்கும் ஆதாயம் என்ற சொற்பதத்தை இது நினைவுபடுத்துகிறது. அழுவதா! சிரிப்பதா!

வருகின்ற வாரத்தில் இந்நோயினால் ஏற்படும் உயிரிழப்பு ஐம்பதாயிரத்தைத் தாண்டுமென்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சிலவேளை இத்தொகை குறைந்த எண்ணிக்கையாகக்கூட இருக்கலாம்

2019 நவம்பர் – டிசம்பரில் மெதுமெதுவாக மனிதரை அரவணைத்து இறுக்கிப்பிடிக்க ஆரம்பித்த கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை ஒரு மில்லியனைத் தாண்டிவிட்டதாகவும், இதில் கொல்லப்பட்டோர் ஐம்பதினாயிரம் ஆகிவிட்டதாகவும் உலக சுகாதார அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

இன்னும் மூன்று மாதங்களுக்குள் இந்நோயைக் கட்டுப்படுத்த தவறின் சுமார் ஐந்து மில்லியன் மக்கள் நோய்க்குட்படுவரெனவும், அவர்களுள் ஐம்பது வீதத்துக்கும் அதிகமானோர் பஞ்சபூதங்களின் பிடியில் சென்றுவிடலாமெனவும் கணிக்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் பரவலானது இரண்டாம் உலகப்போருக்குப் பின்னர் உலகுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளதென்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்ரோனியோ குடறெஸ் சுட்டிக்காட்டிள்ளார்.

இச்சபையின் தலைமையகம் அமைந்திருக்கும் அமெரிக்காவே இன்று கொரோனாவின் முதலாம் எதிரியாகியுள்ளது. ஆரம்பத்தில் இதனை ஷசும்மா| என்று பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், சீனத் தலைவர் மற்றும் ரஸ்யத் தலைவர்களோடு நேரலைத் தொடர்பு கொண்டு ஆலோசனை கேட்குமளவுக்கு இறங்கியுள்ளார்.

இதனை அமெரிக்காவின் பலவீனம் என்பதா? அல்லது நோயின் பலமென்பதா? நீந்தத் தெரியாது ஆற்றில் இறங்கிவிட்டு, மூக்குமுட்டத் தண்ணீர் வந்தபின் நீச்சலடிக்க எத்தனிக்கும் முயற்சியென்றுதான் இதனைக் குறிப்பிட வேண்டும்.

ஜோன்ஸ் கொம்கின்ஸ் பல்கலைக்கழகம் பெற்ற தரவுகளின்படி அமெரிக்காவில் 180,000 க்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நான்கு அமெரிக்கர்களில் ஒருவர் அங்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

கொரோனா தாக்கத்தின் விளைவாக உலகம் முழுவதும் 25 மில்லியன் ஆட்கள் வேலைகளை இழப்பரெனவும் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர், இந்த அமைப்பு உருவானதிலிருந்து அது ஒன்றாக எதிர்கொள்ளும் மிகப்பெரிய சோதனை இது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாம் உலக மகாயுத்தம் முடிவடைந்த வேளையில் உலக சமாதானம் நோக்கிய சிந்தனையில் 1945ம் ஆண்டு ஐ.நா. உருவானது. இப்போது உலகின் 193 நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன. இதன் உருவாக்கம் இரண்டாம் உலக மகாயுத்தத்தின் பின்னர் என்று ஐ.நா. அறிக்கை குறிப்பிட்டுள்ளதால் அது பற்றி நோக்குவது அவசியமாகிறது.

முதலாவது உலக மகாயுத்தம் 1914ம் ஆண்டு யூலை 28ல் ஆரம்பமாகி 1918 நவம்பர் 11வரை இடம்பெற்றது. இந்த யுத்தத்தில் ஒன்பது மில்லியன் படையினரும் ஏழு மில்லியன் பொதுமக்களும் கொல்லப்பட்டனர்.

1918ல், யுத்தத்தின் இறுதிக் காலத்தில் மோசமான இன்பு;வென்சா பரவி உரிய நிவாரணம் கிடைக்காது உலகளாவிய வரையில் சுமார் ஐம்பது மில்லியன் வரையானவர்கள் இறக்க நேர்ந்ததாக ஆவணப்பதிவுகள் தெரிவிக்கின்றன.

இரண்டாவது உலக மகாயுத்தம் 1939 செப்டம்பர் முதலாம் திகதியிலிருந்து 1945 செப்டம்பர் 2ம் திகதிவரை (ஆறு வருடங்களும் ஒரு நாளும்) இடம்பெற்றது. முப்பது நாடுகளைச் சேர்ந்த நூறு மில்லியன் ஆட்கள் இதில் நேரடியாகப் பாதிக்கப்பட்டனர்.

இரண்டாம் உலக யுத்தத்தினால் எழுபது முதல் எண்பத்தைந்து மில்லியன் வரையானோர் கொல்லப்பட்டனர்.

இதனை படுகொலைகள், இனக்கொலைகள், நாசகாரக் கொலைகள், அணுகுண்டுக் கொலைகள், ஆயுதக்கொலைகள், பட்டினிக் கொலைகள், திட்டமிட்ட கொலைகள், நோய்வாய்க் கொலைகள் என்று அறிக்கைகளும் ஏடுகளும் பட்டியலிட்டுள்ளன.

நோய்க் கொலைகள் என்பவை மருந்தின்றியும் சிகிச்சையின்றியும் வாரக்கணக்கிலும் மாதக்கணக்கிலும் படுக்கையில் கிடந்து சந்தித்த மரணங்களைக் குறிப்பவை.

இந்த மரணங்களை ஷகொள்ளை| என்ற பெயரில் அக்காலத்தில் வாழ்ந்தவர்கள் குறிப்பிடுவர். எனது தாயார் 1920களில் பிறந்து இரண்டாம் உலக யுத்த அனுபவங்களை முழுமையாகப் பெற்றவர்.

அப்போது யுத்தம் வீச்சுப் பெற்றிருந்ததால் நிலக்கிடங்குக்குள் (பங்கர்) இருந்த நாட்களைப் பற்றியும், யப்பான் விமானங்கள் குண்டு வீச வரும்போது உள்;ர் காவலர்கள் ஷசைரன்| எச்சரிக்கை ஒலி எழுப்புவது பற்றியும் அவரிடம் பல கதைகள் இருந்தன.

யுத்த காலத்தில் சிகிச்சை இல்லாது நோயினால் இழுபட்டு அடையாளம் தெரியாது ஏற்பட்ட மரணங்களை கொள்ளை மரணமென்று கூறி அவர்களை அவர்களின் படுத்த பாயுடன் சேர்த்து உருட்டி, கைகளால் அந்த உடலைத் தொடாது அப்படியே தூக்கிச் சென்று தீமூட்டிய பல சம்பவங்களை அவர் நேரில் கண்டுள்ளார்.

அந்தளவுக்கு கொள்ளை நோய் பயங்கர வைரஸ் தன்மையானது. சின்னமுத்து, பொக்குளிப்பான், அம்மை எனப்படும் தொற்று வருத்தங்களை அம்மன் தெய்வத்துடன் சம்பந்தப்படுத்தி அதற்கு மருத்துவம் செய்யாது மதரீதியான முறையில் அதற்கு பரிகாரம் செய்வார்கள்.

இப்போது கொரோனா நோயினால் இறப்பவர்களை வெள்ளைத் துணியினால் மூடிக்கட்டி சடலங்களை உறவினர்களிடம் கையளிக்காது அரசாங்க செலவிலேயே தகனம் செய்வதைப் பார்க்கும்போது இரண்டாம் உலக யுத்த கொள்ளை நோயாகவே இது காட்சி கொடுக்கிறது.

அதனால்தான் இந்நோய்க் குறிகள் காணப்படுவோர்களை தனித்திருங்கள், மற்றையோரிடமிருந்து தவிர்த்திருங்கள், சமூக நடமாட்டத்தை மறந்திருங்கள் என்று கோரப்படுகிறது. ஆனால் பெரும்பாலானோர் இதனை செவிமடுப்பதாகத் தெரியவில்லை.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியராகவிருந்த எனது கல்லூரித் தோழன் ஒருவன் தற்போது வடஅமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளான். இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் ஏன்தான் இங்கு வந்து அகப்பட்டுக் கொண்டேனோ என்று அடிக்கடி அங்கலாய்த்துக் கொள்வான்.

யாழ்ப்பாணத்தில் ஊரடங்கு அமுலில் உள்ளது. அங்கிருந்தாலும் எங்கும் செல்ல முடியாதுதானே என்ற எனது கருத்து அவனுக்கு ஏற்புடையாகவிருக்கவில்லை.

அங்கென்றால் ஒழுங்கைகளுக்குள்ளால் அப்படியும் இப்படியும் நடமாடலாம். ஒவ்வொரு வீட்டு வேலிக்குள்ளாலும் சென்று பத்தாவது வீடு வரை செல்லலாம். இங்கு வீட்டுக்கு வெளியேகூட செல்ல முடியவில்லையென்பது அவனது வாதம்.

அங்கு யுத்த காலத்திலிருந்த ஊரடங்கு வேறு. இப்போதையது வேறு. இப்போது வெளியில் சென்று அயலவர்களுடன் உறவாடினால் கண்ணுக்குத் தெரியாத வைரஸ் எல்லோரையுமே பீடித்துவிடும் என்ற எனது விளக்கம் அவனால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தபோதிலும், ஏனோ அது ஒவ்வாமையாக இருந்தது.

இதுதான் இன்று உலகம் சந்திக்கும் மிகப்பெரிய சவால். ஐ.நா. செயலாளருக்கு இது தெரியுமோ தெரியாது.

கொரோனா வைரஸ் கிருமிகளை காவித் திரிபவர்களாக நாம் இருப்போமானால், இதனால் சமூகம் – இனக்குழுமம் – நாடு – உலகம் என எல்லாமே பாதிப்புறும்.

இதனை ஏற்கத் தவறின் கொரோனாவும் ஒரு கொள்ளை நோய்தான். இதுவே மூன்றாம் உலக மகா யுத்தமாகும்.

 

About Author

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *