நோயாளிகள் 24 மணிநேரத்தில் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு, முடிவில் வைரஸ் நெகட்டிவ் என்று வந்தால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர்.

6 கண்டங்கள், 4,000-க்கும் மேற்பட்டோர் மரணங்கள், லட்சக்கணக்கானோர் பாதிப்பு, பலகோடிகளில் பொருள் இழப்பு என உலகையே உலுக்கியெடுத்தபடி வலம் வருகிறது, கொரோனா கோவிட்-19 வைரஸ். சீனா, இரான் ஆகிய பகுதிகளில் உயிர்சேதமும் பொருள்சேதமும் பெருமளவில் ஏற்பட்டுள்ளன. உலகின் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் மணிக்கொருமுறை கொரோனா பாதிப்புச் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன

இந்தச் சூழலில், நம்பிக்கை தருகிற விதமாய் அமைந்திருக்கிறது, சீன நோயாளிகள் பலர் வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளதாக வந்திருக்கிற செய்தி. கொரோனா கோவிட்-19 வைரஸ் பரவத் தொடங்கிய பகுதியான சீனாவில் கொரோனா பாதித்த நோயாளிகளில் 70 சதவிகிதம் பேர் நலம்பெற்று வீடுதிரும்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது உலக சுகாதார நிறுவனம்.

இதுகுறித்த உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையில், “கடந்த திங்கள்கிழமை நிலவரப்படி சீனாவில் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த 80,000-க்கும் மேற்பட்டவர்களில் 70 சதவிகித நோயாளிகள் வைரஸின் தாக்கத்திலிருந்து முழுமையாக விடுபட்டுள்ளனர். மருத்துவமனைகளிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடுதிரும்பியுள்ளனர்” எனத் தெரிவித்துள்ளது.

மேலும், “நோயாளிகள் 24 மணிநேரத்தில் இரண்டு முறை பரிசோதிக்கப்பட்டு, முடிவில் வைரஸ் நெகட்டிவ் என்று வந்தால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வருகின்றனர். இன்னும் சில நாடுகள் மூச்சுத் திணறல் உள்ளிட்ட அறிகுறிகளை உன்னிப்பாய் பரிசோதித்து அதன் பிறகே டிஸ்சார்ஜ் செய்கின்றனர்.

கொரோனாவிலிருந்து விடுபட்டாலும்கூட அந்த நோய் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து நோயாளிகள் முழுமையாய் குணமடைய ஆறு வாரங்கள் வரையிலும் ஆகலாம். அதுவரை நிமோனியா, மூச்சுத்திணறல் ஆகியவை ஏற்படலாம்” எனவும் தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனம்.

Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *